31 மே, 2013

விதையிலிருந்தே மரம்... பகுதி - 1

இராஜபாளையம் - தென்காசி வழியாக மேற்குத் தொடர்ச்சி மலைகளை ரசித்தபடியே பாபநாசம் நோக்கி அதிகாலையில் பயணம். வழியெங்கும் தலை சாய்ந்த நெற்கதிர்கள், வரப்பையொட்டிய தென்னை மரங்கள், இடையிடையே தென்னெந்தோப்புகள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை போர்வையை விரித்தாற்போல் எங்கும் பசுமை. கண்களுக்கு குளிர்ச்சியும், மனதிற்கு அமைதியும் போதுமான அளவிற்க்கு கிடைக்கும் வகையில் இயற்கை பரவியிருந்தது. மனம் லேசாகியது வீசிய குளிர்காற்றில். பயணம் தொடர்கிறது குளிர்ந்த காற்றிக்கிடையிலும், அடர்ந்த மரங்களுக்கூடாகவும். பாபநாசம் வந்தது, கூடவே சிறு சலசல சல... என்னும் சத்தமும் வந்தது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன் கண்ணில்பட்ட முதல் காட்சி, ’வற்றாத தாமிரபரணிஆற்றின் சலசலத்த நீரோட்டம்.



தாமிரபரணி ஆற்றின் கரையோரமிருந்த மண்டபத்தில் விதையிலிருந்தே மரம் என்னும் சுற்றுசூழல் இதழியல், எழுத்துக்கான மூன்று நாள் பயிற்சிப் பட்டறை. மே 24, 25, 26 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் பாபநாசம் அருகே (நெடுஞ்செழியன் அரங்கு [சாலோம் மண்டபம்], டாணா விலக்கு) பொதிகை மலை அடிவாரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வாய்ப்பை வழங்கியவர்கள்பூவுலகின் நண்பர்கள்’.

ஆற்றில் சுற்றுலா மக்களின் கூட்டம் அதிகமிருந்ததால் குளியலையும் காலைச் சிற்றுண்டியையும் மண்டபத்திலேயே முடித்துக் கொண்டு பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டேன். வரகு பொங்கலும், பதனியும் என இயற்கை உணவாக காலை சிற்றுண்டி அமைந்தது. வயிற்றுப்பசியைப் போக்கிவிட்டு, செவிப்பசியுடன் பயிற்சி பட்டறையில் அமர்ந்தேன். சுமார் அறுபது நண்பர்கள் பயிற்சிப் பட்டறையில் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கலந்திருந்தனர்.

நண்பர்கள் பலரும் வெளி மாவட்டங்களில் இருந்து வர காலதாமதமானதால் நண்பகல் 12 மணியளவில் பயிற்சி பட்டறையை முதுபெரும் எழுத்தாளரும், கள ஆய்வாளருமான ஐயா முனைவர் தொ. பரமசிவன்’ துவக்கி வைத்து உரையாற்றினார். மனமும், சூழலும் லேசாக இருந்ததால் ஐயா தொ. பரமசிவனின் பேச்சு மனதிற்குள் பதிந்து கொண்டிருந்தது. 'தொலைத்தவைகளைத் தேடுவோம் என்ற தலைப்பில் பேசினார். அவரைத் தொடர்ந்து ஆல்பர்ட் ராஜேந்திரன் முண்டந்துறை புலிகள் சரணாலயத்தை பற்றி விவரித்தார். நேரம் மதிய உணவு வேளையை நெருங்கியது. மதிய இயற்கை உணவாக பதனி, அவல்பாயசம், தூயமல்லி சம்பா சாதமும், சாம்பார், அவரை பொறியல், ரசம், தயிர்சாதம், வாழைப்பழம்.


மதிய உணவிற்கு பிறகு மீண்டும் பயிற்சிப் பட்டறை ஆரம்பமாகியது. எழுத்தாளர் வள்ளியப்பன் சுற்றுச்சூழல் இதலியலைப் பற்றியும், பசுமைப் புரட்சியின் வன்முறை பற்றி வைகை குமாரசாமியும், நீர் நிலைகளின் அவசியம் குறித்து சாமுவேல் ஆசிர் ராஜும் பேசினர். தாமிரபரணி வாழ்வும், அழிவும் பற்றி சித்த மருத்துவர் மைக்கேல் பேசினார், மைக்கேல் அவர்களின் மூலிகைச் செடிகள் நிறைந்த பண்ணையையும், அருகேயுள்ள தெப்பக்குளத்தில் அவர் அமைத்துள்ள தோட்டத்தையும் கண்டுகளித்தோம். அந்த தெப்பக்குளத் தோட்டத்தில் மட்டும் 702 வகையான நாட்டு வகையைச் சார்ந்த, இன்று காண்பதற்கு கூட இல்லாத பல அறிய செடி, கொடி, மரங்களை மருத்துவர் மைக்கேல் பராமரித்து வருகிறார்.

பல இயற்கையின் அதிசய மரங்களையும் செடிகளையும் கண்டு கொண்டிருக்கும் பொழுதே அந்தி பொழுது சாய்ந்தது. அனைவரும் மீண்டும் மண்டபம் திரும்பினோம். சுக்கும் பனைவெல்லமும் கலந்த சூடான பானமும், பாசிப்பயறும் தயாராக இருந்தது. இந்த பயிற்சி பட்டறையின் தனிச்சிறப்பு அவர்கள் வழங்கிய அனைத்து உணவுமே இயற்கை உணவு வகையைச் சார்ந்தது என்பதே.  எனவேதான் ஒவ்வொரு வேளையும் கிடைத்த அருமையான இயற்கை உணவுகளைப் பற்றி கூறீயுள்ளேன். நம் வாழ்விலும் அதனை உணவாக எடுத்து நல்ல ஆரோக்கிய உடல்நலத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதே விருப்பம்.   

மாலைச் சிற்றுண்டியைத் தொடர்ந்து சில ஆவணப் படங்கள் திரையிடப்பட்டது. ஆவணப் படங்கள் அனைத்தும் இயற்கையின் முக்கியத்துவத்தையும், அதன் இன்றைய நிலையும், அதனால் உண்டாகும் விளைவுகளை விளக்கியது. இன்றைய இயற்கைக்கு எதிரான பல செயல்களிலிருந்து நம்மை நாம் காத்துகொள்ள செய்ய வேண்டியவைகளை படங்கள் உணர்த்தின. அனைத்தையும் கண்டு கொண்டிருக்கும் போதே இரவு உணவுவேளை நெருங்கியது. இரவு உணவாக கேப்பை மற்றும் கம்பு நூடுல்ஸ். சுவை அள்ளியது. வயிறும் நிரம்பியது. கூடவே சேர்ந்து கண்களும் சொருகியது

நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் சில அறைகள் இருந்தன. பெண்களுக்கு அவைகளை ஒதுக்கியிருந்தனர். ஆண்கள் மண்டபத்திலும், மாடியிலும் உறங்கச் சென்றனர். நண்பர்களுடன் அறிமுகம் செய்து கொண்டு, சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தோம். தாமிரபரணி ஆற்றிலிருந்து இளந்தென்றல் காற்று நம்மை கடந்து சென்றது. நிலா வெளிச்சம் குளிர்மையை தர, தலைவாரிவிட்ட காற்றுக்கு நன்றி கூறிவிட்டு, கொண்டு வந்திருந்த போர்வையை தோல்களுக்கு தாங்கலாக வைத்து உறங்கிவிட்டென். நண்பர்களே இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் விட்டுவிடாதீர்கள். நகர வாழ்வில் காற்றிற்காக சன்னலைத் திறந்தால் காற்றுக்கு பதில் கொசுதான் வரும். இப்படி ஆற்றங்கரையோரம் வெட்டவெளியில் ஓர் இரவு தூக்கம் அலாதியானது.

மேலும் படிக்க : 

விதையிலிருந்தே மரம்... பகுதி - 2

விதையிலிருந்தே மரம்... பகுதி - 3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக